Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

சென்னையில் பிக் பாஷ் லீக் தொடக்க போட்டி: பிசிசிஐ மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தீவிரம்!
Sports

சென்னையில் பிக் பாஷ் லீக் தொடக்க போட்டி: பிசிசிஐ மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தீவிரம்!

By MadushanMay 19, 2026

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் 2011 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் டி20 தொடர் பிக் பாஷ் லீக் (Big Bash League - BBL) ஆகும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், உலக அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், உலகிலேயே அதிக கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட இந்தியச் சந்தையைக் கவரும் நோக்கில், பிபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தை இந்தியாவில் நடத்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க போட்டியை நடத்துவது குறித்து கடந்த 3 மாதங்களாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் தொடர்ச்சியாக, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவினர் அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் (M.A. சிதம்பரம்) மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அக்குழுவினர் மைதானத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவையும், கிரிக்கெட் பிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தின் போது, பிசிசிஐ (BCCI) தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க (TNCA) உயர் நிர்வாகிகளுடன் அவுஸ்திரேலியக் குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில், சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டியை நடத்துவதற்கு பிசிசிஐ கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் ஆகிய பலம் வாய்ந்த அணிகள் மோதவுள்ளன.

இருப்பினும், இப்போட்டியை வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், வானிலை ஒரு முக்கிய சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால், மழையினால் போட்டி பாதிக்கப்படாமல் நடத்துவது குறித்தும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் இரு நாட்டு வாரியங்களும் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.

முன்னதாக, 2025-26 பிபிஎல் தொடருக்காக சிட்னி தண்டர் அணியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் பிக் பாஷ் லீக் தொடரில் ஒப்பந்தமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்தத் தொடரிலிருந்து விலக நேரிட்டது. தற்போது, அஸ்வினின் சொந்த மண்ணான சென்னையிலேயே இந்தத் தொடரின் தொடக்க போட்டி நடைபெறவுள்ளது இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio