
எஸ்.ஜே. சூர்யா இயக்கும் 'கில்லர்' படப்பிடிப்பில் தொடரும் சோகம்: சிலிண்டர் வெடித்து ஊழியர் பலி - படக்குழுவினர் மீது வழக்கு!
நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கி வரும் 'கில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக பின்பற்றப்படாததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், படக்குழுவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில், வெடிகுண்டு வெடிக்கும் காட்சி ஒன்றிற்காக எரிவாயு சிலிண்டரை நிரப்பும் பணி நடந்துள்ளது. அப்போது, அந்த சிலிண்டர் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த கொடூர விபத்தில், படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் பணியில் இருந்த மதன் (27) என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியாற்றிய தினகரன், சூர்யா, சக்திவேல் ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்பியம் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்படுவது இது முதல்முறையல்ல. சில வாரங்களுக்கு முன்பு இதே படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவே காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு கொடூர விபத்து நிகழ்ந்து, ஓர் உயிர் பறிபோயிருப்பது, தமிழ்த் திரையுலகில் படப்பிடிப்பு தளங்களின் பாதுகாப்பு குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
