
அரசியலுக்கு வந்த பின்னர் நடிக்கின்றனர்: அநுர அரசை சாடி ஜீவன் தொண்டமான் ஆவேச உரை
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தையும், அதன் உறுப்பினர்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக அரசியல் சூழலை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், அநுர குமாரவைப் போன்றே தமிழகத்தில் விஜயும் ஆட்சியைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டார். "இங்கு மாற்றம் வேண்டும் என்ற உணர்வுதான் அங்கேயும் இருந்தது. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது; விஜய் திரையுலகில் நடித்து முடித்த பின்னரே அரசியலுக்கு வந்தார். ஆனால் இங்குள்ளவர்கள் அரசியலுக்கு வந்த பின்னரே நடித்துக்கொண்டிருக்கின்றனர்" என அவர் சாடினார். அநுர குமாரவின் பெயரால் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பிழைப்பு நடத்துவதாகவும், ஜனாதிபதி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசிய ஜீவன் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அரசாங்கம் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறினார். அண்மையில் இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்தபோது, 2021 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கே அவரை அழைத்துச் சென்றதாகச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மலையக மக்களுக்கு ஒரு வீட்டைக் கூட கட்டிக்கொடுக்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த தெளிவான பதில்களை அரசாங்கத்திடம் அவர் கோரினார். "நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தோம். ஆனால் நீங்கள் எங்களைச் சுரண்டுகிறீர்கள். எனவே, தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் ஆதரவு தருவோம் என எதிர்பார்க்க வேண்டாம்" என அவர் எச்சரித்தார். தோட்டப் பகுதிகளில் பொலிஸாரே மக்களை மிரட்டும் நிலை நீடிப்பதாகவும், வெறும் அறிக்கைகளை விடுவதை விடுத்து உருப்படியான வேலைகளைச் செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.
