
“தூர சக்தியை காக்க பேர சக்தி முயற்சியா?” - ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி இபிஎஸ் அதிரடி கேள்வி!
தமிழக மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள் காணாமல் போன விவகாரத்தில், தற்போதைய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மின்துறை தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் காணவில்லை என்று வெளியாகி வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்களை "தூயசக்தி" என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் திடீரென காணாமல் போயிருப்பதை மக்கள் என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அரசைச் சாடிய எடப்பாடி பழனிசாமி, நடு இரவில் திருடர்கள் வந்து திருடிச் செல்வதற்கு இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா என்று காட்டமாக வினவியுள்ளார். மேலும், மின்சார வாரிய அலுவலகப் பாதுகாப்பையும் மீறி நடந்துள்ள இந்த திருட்டுச் சம்பவத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு பெரிய உள்நோக்கம் ஒளிந்திருக்கிறது என்றும், தவறு செய்த யாரையோ காப்பாற்ற நினைக்கும் பின்னணி சதி இதில் இருப்பது உறுதி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
"தூர சக்தி, ஓர சக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேர சக்தி?" என்று தற்போதைய திமுக அரசை மறைமுகமாக விமர்சித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் மூடி மறைக்கப்படும் உண்மைகள் அனைத்தும் வெளிவர வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, ஹார்டு டிஸ்குகள் திருட்டு போனது குறித்து முறையான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இபிஎஸ் தனது பதிவில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
