
மட்டக்களப்பு பட்டிப்பளையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின நிகழ்வு
இலங்கை தமிழரசுக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதின நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை (01) மாலை மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பட்டிப்பளையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை மற்றும் பட்டிப்பளை கிளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், பட்டிப்பளை கிளையின் தலைவர் அ. கருணாகரன் தலைமையில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மேதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து பட்டிப்பளை விளையாட்டு மைதானம் வரை பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தும் மற்றும் மேதினத்தின் சிறப்பினை விளக்கும் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டனர். குறிப்பாக, முச்சக்கர வண்டி சாரதிகள் அமைப்பு, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் தமது முச்சக்கர வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்களுடன் அணிவகுத்து வந்ததோடு, மீனவர்கள் தமது படகுகளையும் ஊர்வலத்தில் காட்சிப்படுத்தியமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
ஊர்வலத்தைத் தொடர்ந்து பட்டிப்பளை விளையாட்டு மைதானத்தில் பிரதான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், டாக்டர் இ. சிறிநாத், க. கோடீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிரகடன உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியினரால் விசேட மேதினப் பிரகடன உரையும் வாசிக்கப்பட்டது.
இன்றைய மேதின நிகழ்வை முன்னிட்டு பட்டிப்பளை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டிருந்தன. அப்பகுதிகளில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பல்வேறு இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
