Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

அரசியல் பதற்றம்: நெதர்லாந்து ஆளும் கட்சியைக் குறிவைத்து தாக்குதல்
World

அரசியல் பதற்றம்: நெதர்லாந்து ஆளும் கட்சியைக் குறிவைத்து தாக்குதல்

By MadushanMay 8, 2026

நெதர்லாந்து பாராளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (07) இரவு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் 'தி ஹேக்' மையப்பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இரவு சுமார் 09 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதை உள்ளூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து நெதர்லாந்து பிரதமரும் D66 கட்சியின் தலைவருமான ராப் ஜெட்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டாசுகள் மூலம் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று அலுவலகத்தின் கதவில் இருந்த தபால் பெட்டி வழியாக உள்ளே வீசப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது ஒரு கோழைத்தனமான அச்சுறுத்தல் செயல் எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட மத்தியவாத கட்சியான D66, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான கீர்ட் வில்டர்ஸின் சுதந்திரக் கட்சியைத் தோற்கடித்து வியத்தகு வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும், குடியேற்றவாசிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது இக்கட்சியின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

வலதுசாரி ஆதரவாளர்களால் 'மேல்தட்டு முற்போக்காளர்களின் கட்சி' எனத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் D66 கட்சி மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், அந்நாட்டு அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள அரசியல் உள்நோக்கங்கள் குறித்து பாதுகாப்புத் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio