
"தயவுசெய்து என்னை மன்னித்துவிடு நண்பா" - நடிகர் சூரிக்கு கொட்டாச்சி விடுத்த உருக்கமான வீடியோ!
வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகும் ‘பூ காய் கனி’ திரைப்படத்தின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானசி கதாநாயகியாக அறிமுகமாகிறார். படம் மற்றும் மானசியின் அறிமுகம் குறித்து பேச வேண்டிய இந்த விழாவில், திடீரென நடிகர் சூரி தங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்வதில்லை என்று இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் மற்றும் கொட்டாச்சி ஆகிய இருவருமே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் கொட்டாச்சி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் நண்பன் சூரி குறித்து தான் பேசிய கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். அந்த வீடியோவில், "நண்பன் சூரி குறித்து நான் பேசிய வீடியோவை இணையத்தில் அனைவரும் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆனால், என்றைக்குமே சூரி எனக்கு நல்ல நண்பர் தான். எங்களுடைய நட்புக்குள் எந்தவொரு விரிசலுமே இல்லை; அவர் மீது எனக்கு எந்தவொரு கோபமும் கிடையாது" என்று கொட்டாச்சி தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் சூரியின் கடின உழைப்பைப் பாராட்டியுள்ள அவர், "சூரி இன்றைக்கு இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது சொந்த உழைப்பும், திறமையும்தான் காரணம். சினிமாவில் திறமைக்குதான் வேலை, உழைப்புக்குதான் மரியாதை கிடைக்கும். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநரும், சூரியும் நல்ல நண்பர்கள் என்பதால், அவர்களுக்கு இடையே ஆரம்பகாலத்தில் நடந்த வேதனையை இயக்குநர் அந்த இடத்தில் பகிர்ந்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த ஒருவர், கொட்டாச்சியும் சூரியின் ஆரம்ப கால நண்பர் தானே என்று கேட்க, நான் உணர்ச்சிவசப்பட்டு சமீபத்தில் நடந்த சில விஷயங்களை பற்றி தவறாகப் பேசிவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் தவறை உணர்ந்து மிகவும் உருக்கமாகப் பேசிய கொட்டாச்சி, "தயவுசெய்து சூரி என்னை மன்னித்துவிடுங்கள். என் நண்பன் எனக்கு எதுவும் பண்ணவில்லை என்ற ஆதங்கத்தில்தான் அந்த குறையை அங்கே பகிர்ந்தேன். நீங்கள் வெளியில் தெரியாமல் நிறைய குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்து வருகிறீர்கள். அதை எல்லாம் கேள்விப்படும்போது எனக்குள் பெருமையாக இருக்கிறது. சினிமாவில் இதை பண்ணவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு அந்த இடத்தில் நான் சொல்லியிருக்க கூடாது. ஆனால், அவசரப்பட்டு சொல்லிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடு நண்பா” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். கொட்டாச்சியின் இந்த உருக்கமான மன்னிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
