
பெங்களூரு ஆசிரமத்தில் நொறுங்கிய ஈகோ: நெகிழ்ச்சியுடன் அனுபவங்களைப் பகிர்ந்த ரஜினிகாந்த்!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பெங்களூருவில் உள்ள 'வாழும் கலை' (Art of Living) ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்கமுடியாத அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்தநாள் மற்றும் ஆசிரமத்தின் 45-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், தனது 'ஈகோ' உடைந்த அந்தத் தருணத்தைப் பற்றி உருக்கமாகப் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
ஆசிரமத்தில் தான் கழித்த நாட்களைப் பற்றிப் பேசிய ரஜினிகாந்த், "ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு தங்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த மையத்தின் இயற்கை எழில், அங்கிருந்த மனிதர்கள், விலங்குகள் என அனைவரிடமும் நிலவிய அமைதி என்னை ஈர்த்தது. இதனால் திட்டமிட்டதை விடக் கூடுதலாக 15 நாட்கள் அங்கேயே தங்கிவிட்டேன். இமயமலைப் பயணத்திற்குப் பிறகு, நான் மிகுந்த மன அமைதியைப் பெற்ற இடம் இதுதான்" என்று குறிப்பிட்டார். அங்குள்ள ஒரு குதிரைக்குத் தனது பெயரே சூட்டப்பட்டிருப்பதை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது திரையுலகப் புகழால் ஏற்பட்ட தற்பெருமை (Ego) ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் எப்படி மறைந்தது என்பதை விளக்கினார். ஒருமுறை குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தன்னைத் தரிசன உலாவுக்கு அழைத்தபோது, தனது நட்சத்திர அந்தஸ்து காரணமாக மக்கள் கூட்டம் கூடிவிடும் என்று ரஜினிகாந்த் அஞ்சியுள்ளார். "நான் வந்தால் மக்கள் 'ரஜினி ரஜினி' என்று ஆர்ப்பரிப்பார்கள், ஆட்டோகிராப் மற்றும் புகைப்படங்களுக்காகக் குழுமுவார்கள், அது உங்களுக்கு இடையூறாக அமையும்" என்று குருவிடம் அவர் தயக்கத்துடன் கூறியுள்ளார்.
ஆனால், குருதேவின் அழைப்பை ஏற்று அந்த உலா சென்றபோது ரஜினிகாந்திற்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகத் தன்னை நன்கு அறிந்த தமிழர்கள் கூட, ரஜினிகாந்தைக் கண்டு எந்த ஆரவாரமும் செய்யவில்லை. "யாரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை. நானே வலியச் சென்று கை அசைத்தாலும், அவர்கள் தியான நிலையில் குருவையே கவனித்துக் கொண்டிருந்தனர். பல செல்வாக்கு மிக்க மனிதர்களைச் சந்தித்த எனக்கு, அன்று அந்த ஆசிரம மக்கள் காட்டிய பக்குவம் எனது ஈகோவை அடியோடு உடைத்தது" என்று ரஜினிகாந்த் கூறினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நட்சத்திர அந்தஸ்து என்பது தற்காலிகமானது என்றும், ஆன்மிக பலம் மட்டுமே ஒருவரை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் உணர்ந்ததாகத் தெரிவித்தார். "திரையுலகப் புகழ் சில காலம் மட்டுமே இருக்கும், ஆனால் குருதேவ் போன்றவர்களின் புகழ் மறைவுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கும்" என்று அவர் புகழாரம் சூட்டினார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒரு நடிகர், தனது ஈகோ உடைந்ததை இவ்வளவு வெளிப்படையாகப் பேசியது இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
