Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

தெருநாய்களை மீண்டும் பொது இடங்களில் விட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
India

தெருநாய்களை மீண்டும் பொது இடங்களில் விட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By MadushanMay 19, 2026

பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு, அவற்றை மீண்டும் அதே பொது இடங்களில் விடக்கூடாது என்ற தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு இன்று (மே 19) தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், தெருநாய்கள் தொடர்பாக 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவு எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு மருத்துவ நடைமுறைகள் முடிந்த பிறகு, அவற்றை மீண்டும் பொது வெளியில் நடமாட விடக்கூடாது என்றும், மாறாக அத்தகைய நாய்களை முறையான பாதுகாப்பு இல்லங்களில் (Shelter Homes) அடைத்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதிகரிப்பதே அச்சுறுத்தல்: கவலை தெரிவிக்கும் நீதிமன்றம்

சமீபகாலமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பயணிகள் மீது தெருநாய்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அச்சுறுத்தல் தற்போது சாதாரண தெருக்களைத் தாண்டி, விமான நிலையங்கள் மற்றும் முக்கிய குடியிருப்புப் பகுதிகளையும் எட்டிவிட்டதாக நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றங்களுக்கு உத்தரவு:

உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகள் மாநிலங்களில் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், உயர் நீதிமன்றங்களே தாமாக முன்வந்து (Suo Motu) வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை (Animal Birth Control Centers) போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்றும், வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெறிநாய்க்கடி நோய் தாக்கிய மிக ஆபத்தான நிலையில் உள்ள நாய்களை, சட்டப்படி அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் கருணைக்கொலை செய்வது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio