
இலங்கை ஜனாதிபதியின் வாழ்த்துக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியுடன் நன்றி
இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் வழங்கிய வாழ்த்துச் செய்திக்கு, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் பாரிய வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விஜய்க்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அண்டை நாடான இலங்கையின் ஜனாதிபதியும் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள கௌரவ சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் பின்னிப்பிணைந்துள்ளதோடு, மக்களிடையேயான நீடித்த உறவுகளால் மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளதையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தச் செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நன்றியறிவிப்பைப் பதிவு செய்துள்ளார். அதில், "இலங்கையின் கௌரவ ஜனாதிபதி அவர்களின் வாழ்த்துக்களால் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களது கனிவான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்" என அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவையும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த வாழ்த்துப் பரிமாற்றம், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
