
"மோடியும் அமித் ஷாவும் துரோகிகள்; நாட்டை விற்றுவிட்டார்கள்" – ராகுல் காந்தி கடும் தாக்கு!
நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தரப்பிரதேசத்தின் வீர பாசியின் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "மறைந்த தலைவர்களான வீர பாசியும், அம்பேத்கரும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். ஒவ்வொரு குடிமகனும் சமமானவர் என்றும், இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்றும் அவர்கள் கூறினர். இந்த நாடு ஏதோ ஒரு சாதிக்கோ அல்லது அமைப்புக்கோ மட்டும் சொந்தமானது அல்ல; நாட்டின் அரசியலமைப்பும் இதையேதான் வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு என்பது இந்திய மக்களின் குரல் ஆகும். அந்த அரசியலமைப்பைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்" என்று குறிப்பிட்டார்.
"பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் துரோகம் செய்யும் அமைப்புகள்"
தொடர்ந்து பாசிச மற்றும் ஆளும் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ராகுல் காந்தி, "பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்போதெல்லாம் உங்கள் முன்பாக நரேந்திர மோடி குறித்தும் அமித் ஷா குறித்தும் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் துரோகிகள் என்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் துரோகிகள். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் துரோகம் செய்யும் அமைப்புகள் ஆகும். ஏனெனில், இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டையே விற்றுவிட்டார்கள். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நமது அரசியலமைப்பின் மீதும், வீர பாசி, மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளன" எனச் சாடினார்.
அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், "அரசியலமைப்பு என்பது ஏதோ ஒரு சாதாரணப் புத்தகம் அல்ல. அம்பேத்கர், காந்தி, வீர பாசி ஆகியோரின் ரத்தத்தில் எந்த கொள்கைகள் ஊறி இருந்ததோ, அவற்றின் தொகுப்புதான் இந்த அரசியல்சாசனம். ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மிதித்து துவைக்கின்றன; அதை சின்னாபின்னமாக்குகின்றன. அம்பேத்கர் சிலை முன்பு நாம் தலைவணங்குவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் முக்கியமாகும்" என்றார்.
"மோடியின் விமானப் பயணம் & வரவிருக்கும் பொருளாதாரப் புயல்"
பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்த ராகுல் காந்தி, "தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள் என்று நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குக் கூறி இருக்கிறார். ஆனால், இவற்றைக் கூறிய மோடியோ, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குச் செல்கிறார். இதையெல்லாம் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
மேலும், நாட்டின் எதிர்காலப் பொருளாதாரம் குறித்து எச்சரித்த அவர், "நாட்டில் தற்போது ஒரு பொருளாதார புயல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடுமையான பணவீக்கம் ஏற்படும், அனைத்துப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும். அதோடு, உரங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். வர இருக்கும் காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கப் போகின்றன. நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்படப் போகிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்பதால், நாட்டின் விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகமும் தடைபடும்" எனத் தெரிவித்தார்.
இறுதியாக, "இந்த பொருளாதார புயலின் தாக்கம் அதானி, அம்பானி, மோடி ஆகியோரை சிறிதும் பாதிக்காது. அவர்கள் தங்களது ஆடம்பர மாளிகைக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த பொருளாதாரப் புயலால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய மக்கள்தான்" என்று ராகுல் காந்தி தனது உரையில் உருக்கமாகத் தெரிவித்தார்.
