
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் புதிய சட்டத் திருத்தம்: பெண்களின் மவுனம் திருமண சம்மதமாகக் கருதப்படும் என அதிரடி உத்தரவு!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அந்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் தொடர்ந்து விதித்து வருகின்றனர். ஏற்கனவே பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்த கட்டமாக தற்போது திருமண விவாகரத்து மற்றும் பெண்களின் திருமண சம்மதம் தொடர்பான புதிய சட்டத் திருத்தம் ஒன்றை தலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. 'கணவன் - மனைவி பிரிவிற்கான கொள்கைகள்' என்ற தலைப்பில் இந்த புதிய சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய புதிய சட்டத் திருத்தத்திற்கு தலிபான்களின் உச்ச தலைவரான ஹிபத்துல்லா அகுண்ட்ஸடா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள கன்னிப் பெண்கள் தங்களின் திருமணத்தின் போது அமைதியாக இருந்தால், அந்த மவுனமே அவர்களின் திருமண சம்மதமாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் விருப்பத்தை விட அவர்களின் மவுனத்தை சம்மதமாக எடுத்துக்கொள்ளும் இந்த உத்தரவு மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சட்டத் திருத்தத்தில் பெண் குழந்தைகளின் திருமண விவகாரம் குறித்தும் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகள், தாங்கள் பருவம் அடைந்த பிறகு அந்தத் திருமணத்தை ரத்து செய்ய விரும்பினால், அவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அத்தகைய திருமணங்களை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் தலிபான் நீதிமன்றங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த அடுத்தடுத்த கட்டுப்பாடுகள் ஆப்கான் பெண்களின் அடிப்படை உரிமைகளை மேலும் பறிப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
