
தமிழகத்திற்கு தங்கு தடையின்றி உரங்களை வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!
தமிழகத்தில் நடப்பு காரீப் பருவ சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்திற்குத் தேவையான உரங்களை தங்கு தடையின்றி வழங்கிட உத்தரவிடக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வேளாண்மையை தங்களது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். மாநிலத்தில் சுமார் 48.27 லட்சம் ஹெக்டரில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் ஹெக்டரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மொத்த நீர் வளங்களில் வெறும் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உள்ள நிலையிலும், நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், பழங்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் எனப் பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி இங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை முதல்வர் விஜய் துறைவாரியாக ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், வேளாண்மை - உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நடப்பு 2026-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத்தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்கள் உர உற்பத்தியாளர்களால் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், நடப்பு மே மாதம் 3-வது வாரத்தில் தென்மேற்குப் பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், காரீப் பருவத்தில் அதிகப்படியான பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. இதன் விளைவாக, யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை வரும் நாட்களில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய இக்கட்டான தருணத்தில் உரப்பற்றாக்குறை ஏற்பட்டால், அது மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று முதல்வர் தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
நடப்பு காரீப் பருவத்தில், மொத்த சாகுபடிப் பரப்பில் 40 சதவீதமான 25 லட்சம் ஹெக்டரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. சாதகமான வானிலை காரணமாக சாகுபடிப் பணிகள் வேகம் எடுத்துள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழக விவசாயிகளின் தேவையை உடனடியாக நிறைவு செய்யும் பொருட்டு, 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்களை உடனடியாக தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று முதல்வர் கோரியுள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, குறித்த நேரத்தில் உரங்கள் தமிழகத்திற்கு வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் தனது கடிதத்தின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
