Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்: வட்டி வீதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி தீவிர பரிசீலனை!
World

அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்: வட்டி வீதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி தீவிர பரிசீலனை!

By MadushanMay 21, 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்து வருவதைத் தொடர்ந்து, நாணய மதிப்பை நிலைப்படுத்துவதற்காக வட்டி வீத அதிகரிப்பு உள்ளிட்ட சாத்தியமான அனைத்து வழிகளையும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடப்பு வாரத்தில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி மிக மோசமான சரிவைச் சந்தித்து, வரலாற்றில் முதல்முறையாக 97 ரூபாய் என்ற எல்லையைத் தொட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து பல சுற்றுகள் கொண்ட உள்வாரி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக வங்கித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. அதன்படி, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வட்டி வீத வித்தியாசம் தசாப்த கால குறைவை எட்டியுள்ளதால், வெளிநாட்டு முதலீடுகளை மீண்டும் ஈர்க்கும் பொருட்டு வட்டி வீதத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்து (NRIs) டொலர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உள்ளூர் வங்கிகள் ஊடாக விசேட வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் சர்வதேச சந்தையில் டொலர்களைத் திரட்டுவதற்காக மத்திய அரசின் அனுமதியுடன் இறையாண்மைப் பிணைப்பத்திரங்களை (Sovereignty Bonds) விற்பனை செய்தல் ஆகிய உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

2013 'Taper Tantrum' நெருக்கடியைப் போன்ற உத்திகள்

இந்த அவசரகால நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'Taper Tantrum' பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எடுத்த அதிரடி முடிவுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அன்றைய காலகட்டத்தில் இத்தகைய திட்டங்கள் மூலம் சுமார் 30 பில்லியன் டொலர் வரை ஈர்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழலில் 50 பில்லியன் டொலர் வரை திரட்ட முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கியின் டொலர் கையிருப்பை உடனடியாக உயர்த்தவும் 5 பில்லியன் டொலர் மதிப்பிலான நாணயமாற்று ஏலத்தை (Currency Swap Auction) ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்திருந்தது. சந்தை நிலவரத்தைப் பொறுத்து இதுபோன்ற மேலும் பல ஏலங்கள் நடத்தப்படலாம் எனவும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாத நாணயக் கொள்கைக் கூட்டமும் வெளிநாட்டு முதலீட்டாளர் வெளியேற்றமும்

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) வட்டி வீதம் தற்போது 5.25% ஆக மாற்றமின்றி உள்ள நிலையில், அதன் அடுத்த கட்டக் கூட்டம் வரும் ஜூன் 3 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் பணவீக்கம் அதிகரித்து வருவதாலும், நாணய மதிப்பு சரிவதாலும் இக்கூட்டத்தில் வட்டி வீதம் உயர்த்தப்படலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் பரவலாகக் கணித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது நிதியைத் தொடர்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர். இந்த 2026 ஆம் ஆண்டில் இதுவரை இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறியுள்ள வெளிநாட்டு நிதி, கடந்த ஆண்டின் சாதனை அளவான 19 பில்லியன் டொலரைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளின் கவலை மற்றும் தற்போதைய இலக்கு:

இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளும், வங்கித்துறையும் தற்போதும் மிகவும் வலுவாக உள்ள போதிலும், அது நாணய மாற்று விகிதத்தில் சாதகமாகப் பிரதிபலிக்கவில்லை என உயர்மட்ட அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். எனினும், ரூபாயின் வீழ்ச்சியைத் தடுப்பதே தற்போதைய முதன்மை நோக்கம் என்றும், அதற்காக எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளதாகவும் இக்கூட்டத்தில் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio