Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்காவிட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம்: நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எச்சரிக்கை
Sri Lanka

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்காவிட்டால் வீதியில் இறங்கிப் போராடுவோம்: நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எச்சரிக்கை

By MadushanMay 6, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள் என்றும், அந்தப் போராட்டத்திற்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்கப் போவதாகவும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் அனர்த்தத்தினால் நாட்டின் உள்நாட்டு உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொதுவாக தேசிய அரிசி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை வழங்கும் பெரும் போகச் செய்கை, இந்த இயற்கை அனர்த்தத்தினால் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே அழிவைச் சந்தித்துள்ளது. ஒவ்வொரு பெரும் போகத்திலும் சுமார் 800,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில், இம்முறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி 603,960 ஹெக்டேயரில் மாத்திரமே பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாசமடைந்துள்ளதுடன், தேயிலை, தென்னை உள்ளிட்ட ஏனைய பயிர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

பயிர் அழிவினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2026 சிறு போகச் செய்கை தொடர்பில் விவசாய அமைச்சரிடம் அவர் சில முக்கிய கேள்விகளை முன்வைத்தார். 2025/2026 பெரும் போக நெல் உற்பத்தி தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீடு என்னவென்றும், 2026 ஆம் ஆண்டில் தேசிய மட்டத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதா என்றும் அவர் வினவினார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட மறு நடுகைக்கான விதைகள், உரம் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் மாவட்ட ரீதியாக எவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் அவர் கோரினார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2026 சிறு போகச் செய்கையினை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். சில மாவட்டங்களில் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், விவசாய சேவை நிலையங்களுக்கு இதுவரை போதுமான உரம் கிடைக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மணல் கலந்த மண் காரணமாக அதிக அளவு யூரியா தேவைப்படும் நிலையில், விநியோகத் தாமதத்தினால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்நிலை தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிப்பது உறுதி எனத் தெரிவித்தார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio