Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை
World

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

By MadushanMay 4, 2026

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் அனைத்து வணிகக் கப்பல்களும் எண்ணெய் டேங்கர்களும் தமது ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், இதனை மீறினால் அத்தகைய கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனவும் ஈரான் இராணுவம் இன்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பிராந்தியத்தில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கக் கடற்படை ஒரு விசேடப் பணியை ஆரம்பிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஈரான் இராணுவம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பைத் தங்களது முழு வலிமையுடன் நிர்வகிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆயுதப் படைகளின் முன் அனுமதியோ அல்லது ஒருங்கிணைப்போ இன்றி எந்தவொரு வணிகக் கப்பலோ அல்லது எண்ணெய் டேங்கர்களோ இந்தப் பகுதியை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படும் கப்பல்களின் பாதுகாப்பிற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்றும் ஈரான் இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இப்பிராந்தியத்தில் அத்துமீறி நுழைய முயலும் அமெரிக்க இராணுவம் உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டுப் படைகளுக்கும் எதிராக ஈரான் கடும் எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டுப் படைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ள ஈரான், சர்வதேச கடற்பரப்பில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரகடனம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio