
மூதூர் சூறாவளி பாதிப்பு: பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பம்
திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேசத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வதிவிடங்களை அமைத்துக் கொடுக்கும் புதிய வீட்டுத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் தோப்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படும் கிழக்கு மாகாண மக்களுக்குப் பாதுகாப்பான வதிவிடங்களை உறுதிசெய்யும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வழிகாட்டலுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நான்கு குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான், தனியார் துறையின் பங்களிப்புடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் தொடரும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாகாணத் தலைவர், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள், அரச உயரதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இயற்கை அனர்த்தத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு இத்திட்டம் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
