Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

கனடா - அமெரிக்க எல்லை ஆள்கடத்தல்: நான்கு பேர் பலியான வழக்கில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
Canada

கனடா - அமெரிக்க எல்லை ஆள்கடத்தல்: நான்கு பேர் பலியான வழக்கில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

By MadushanMay 12, 2026

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோரை அழைத்துச் சென்றபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய தீமோதி ஓக்ஸ் (Timothy Oakes) என்பவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 35 வயதான இவர் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீதித் துறையின் (DOJ) தகவல்படி, Montreal நகருக்கு மேற்கே அமைந்துள்ள அக்வெசாஸ்னே (Akwesasne) பகுதியைச் சேர்ந்த தீமோதி, இந்த ஆள்கடத்தல் கும்பலின் முக்கிய நபராகச் செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு நபரையும் எல்லை கடத்த அவருக்கு சுமார் 1,000 Dollars ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஆள்கடத்தல் சதி மற்றும் மரணத்திற்கு காரணமான கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி, ரோமானியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தை தீமோதி ஓக்ஸ் கார்ன்வால் தீவில் (Cornwall Island) ஒரு படகிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து அவரது சகோதரர் கேசி ஓக்ஸ் (Casey Oakes) என்பவரால் அந்த குடும்பத்தினர் செயின்ட் லாரன்ஸ் (St. Lawrence River) ஆறு வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், கடுமையான வானிலை காரணமாகப் படகு கவிழ்ந்ததில் கேசி ஓக்ஸ் மற்றும் அந்த ரோமானிய குடும்பத்தினர் ஐந்து பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பலியானவர்களில் புளோரின் இோர்டாச்சே (Florin Iordache), அவரது மனைவி கிறிஸ்டினா (Cristina Zenaida Iordache) மற்றும் அவர்களது இரண்டு வயது மகள் எவலின் (Evelin), ஒரு வயது மகன் எலியன் (Elyen) ஆகியோர் அடங்குவர். இதில் இரு குழந்தைகளும் கனடா நாட்டுப் பிரஜைகள் என்பது சோகமான விஷயமாகும். "கடுமையான காற்று, உறைபனி மற்றும் போதிய வெளிச்சமின்மை போன்ற ஆபத்தான சூழல்கள் தெரிந்திருந்தும், குற்றவாளி இந்த கடத்தலைத் தொடர்ந்தார்" என்று அமெரிக்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தீமோதி தனது வீட்டைப் புலம்பெயர்ந்தோரைத் தற்காலிகமாகத் தங்க வைக்கும் இடமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகளான டகோட்டா மான்டூர் (Dakota Montour), கவிசியோஸ்தா செலீசியா ஷாரோ (Kawisiiostha Celecia Sharrow) மற்றும் ஜேனட் டெரன்ஸ் (Janet Terrance) ஆகியோர் ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஸ்டெபானி ஸ்கொயர் (Stephanie Square) மற்றும் ரக்சொந்தனோஸ்தா டெலார்மியர் (Rahsontanohstha Delormier) ஆகிய இருவரும் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio