
சிறுத்தைப் பல் செயின் விவகாரம்: ராப் பாடகர் 'வேடன்' மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வனத்துறை தீவிரம்!
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல பிரபலமான பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் பிரபல ராப் பாடகர் வேடன். இவர் கடந்த ஆண்டு போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்த்து போலீசாரால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தச் சமயத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் அணிந்திருந்த செயினில் சிறுத்தையின் பல் பொருத்தப்பட்டிருந்ததை கவனித்த கேரள வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேடன் மீது தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து அப்போது விளக்கம் அளித்த பாடகர் வேடன், அந்தச் செயினை தனக்கு ஒரு ரசிகர் அன்பளிப்பாக வழங்கியதாகவும், அதில் இருப்பது உண்மையான சிறுத்தைப் பல்தானா என்பது தனக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வேடனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்தச் சிறுத்தைப் பல், உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக கொல்கத்தாவில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு (CFSL) பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த ஆய்வகத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பரிசோதனை முடிவில், பாடகர் வேடன் கழுத்தில் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தைப் பல்தான் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆய்வக அறிக்கை மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராப் பாடகர் வேடன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge sheet) தாக்கல் செய்ய கேரள வனத்துறையினர் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர் மேலும் சட்டச் சிக்கல்களில் சிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
