
பும்ராவை கடுமையாக சாடிய சுனில் கவாஸ்கர்: "நோ-பால் வீசுவது அசிங்கமானது" என நேரலையில் கொந்தளிப்பு
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் கொண்டாடப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆனால், 2026 ஐபிஎல் தொடரில் அவரது தற்போதைய ஃபார்ம் மற்றும் செயல்பாடு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பும்ரா செய்த தவறுகள், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேரலை வர்ணனையின் போதே கவாஸ்கர் பும்ராவை மிகக் கடுமையாகச் சாடியது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் பும்ரா தனது வழக்கமான வேகத்தையும் துல்லியத்தையும் இழந்து தடுமாறி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் ஏதுமின்றி 45 ரன்களை வாரி வழங்கிய அவர், மிக முக்கிய தருணங்களில் 3 நோ-பால்களை வீசினார். போட்டியின் 14-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நோ-பால்களை வீசிய பும்ரா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஹிம்மத் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. விக்கெட் வாய்ப்பில் இருந்து தப்பிய பேட்ஸ்மேன் அதன் பிறகு அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவிக்க, லக்னோ அணியின் ஸ்கோர் 220 ரன்களைக் கடந்து மும்பை அணிக்கு இமாலய இலக்காக மாறியது.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுனில் கவாஸ்கர், "பும்ரா மீண்டும் நோ-பால் வீசிவிட்டார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் ஒரு புரொபஷனல் கிரிக்கெட்டர். வைடு பந்துகளைக் கூடப் புரிந்து கொள்ளலாம், ஆனால் இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் நோ-பால் வீசுவது அசிங்கமானது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். பும்ராவின் இந்த தொடர் தவறுகளால் மும்பை அணியின் பயிற்சியாளர்கள் மகிலா ஜெயவர்த்தனே மற்றும் மலிங்கா ஆகியோர் செய்வதறியாது தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தது, மைதானத்தில் இருந்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. பும்ரா போன்ற ஒரு மூத்த வீரர் இக்கட்டான நிலையில் செய்த இந்த தவறு மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
