Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

தமிழக அரசியல் மாற்றம்: முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்; ஆட்சியமைக்கத் தயாராகிறது த.வெ.க!
India

தமிழக அரசியல் மாற்றம்: முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்; ஆட்சியமைக்கத் தயாராகிறது த.வெ.க!

By MadushanMay 5, 2026

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ இராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகையின் செயலாளர் மூலமாகப் பெறப்பட்டு, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மு.க.ஸ்டாலினின் இராஜினாமாவை ஆளுநர் முறைப்படி ஏற்றுக் கொண்டதும், தற்போதைய அமைச்சரவை கலைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க) ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நீடித்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் விதமாக இந்தத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், தனிப்பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சியை அமைக்க அக்கட்சிக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், த.வெ.க தற்போது கூட்டணி குறித்த ஆலோசனைகளில் இறங்கியுள்ளது.

விரைவில் சட்டசபையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க உள்ளது. இதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகளுடன் த.வெ.க தலைமை தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதர கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Boom Tamil
Live NowBoom Tamil Radio