
'தித்வா' சூறாவளி பாதிப்பு: மண்சரிவு அபாய எதிர்கொண்ட ஆதார வைத்தியசாலைகளை உலக சுகாதார ஸ்தாபன குழுவினர் நேரில் கண்காணிப்பு
'தித்வா' சூறாவளி காரணமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான மண்சரிவு அபாயத்துக்குள்ளான ஆதார வைத்தியசாலைகளின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் ஆகியோர் தலைமையிலான குழுவினரே இந்த முக்கிய மீளாய்வை முன்னெடுத்தனர். இதன்போது, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தடையற்ற மருத்துவச் சேவையை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களின் சேவையை இக்குழுவினர் வெகுவாகப் பாராட்டினர்.
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தின் ஸ்பிரிங்வெலி, சில்மியாபுர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை, வடக்கு மெதகும்புர ஆகிய ஆதார வைத்தியசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பான மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தன. தற்போது இவ்வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெறும் பிரிவுகள் (Ward ශාඛா) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், பொதுமக்களின் அவசரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் மாத்திரமே தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த விஜயத்தின் போது தனமல்வில ஆதார வைத்தியசாலை, எல்ல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் டிக்கோயா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. "இலங்கையை மீள கட்டியெழுப்பும்" தேசிய திட்டத்தின்கீழ், பெருந்தோட்ட மற்றும் பின்தங்கிய பகுதியில் உள்ள மக்களுக்குப் பிரதான சேவையாற்றும் ஸ்பிரிங்வெலி வைத்தியசாலையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக 148 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பரிந்துரைகளின் அடிப்படையில் இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
மேலும், பிரித்தானிய காலனித்துவ வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட லிந்துலை வைத்தியசாலையானது, போக்குவரத்து வசதிகள் குறைந்த தலவாக்கலை, அகரபத்தனை, டயகம போன்ற மலையகத் தோட்டப் பகுதி மக்களின் பிரதான சுகாதார மையமாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கு விசேட அவதானம் செலுத்தியுள்ளது. இந்த முக்கிய கண்காணிப்பு நிகழ்வில் மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தொற்றா நோய் பிரிவின் குழுத் தலைவர் வைத்தியர் பாரூக் குரேஷி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
