
வீட்டு வேலை செய்த பெண்மணி இப்போது சட்டமன்ற உறுப்பினர்: மேற்கு வங்கத்தில் கலிதா மாஜி சாதனை!
மேற்கு வங்க மாநில அரசியலில் ஒரு சாதாரண வீட்டு வேலை செய்து வந்த பெண்மணி, இன்று சட்டமன்ற உறுப்பினராக (MLA) உயர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்கு வங்கத்தின் குஸ்காரா நகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் கலிதா மாஜி. இவர் அப்பகுதியில் உள்ள சுமார் நான்கு வீடுகளில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது மற்றும் சமையல் வேலைகளைச் செய்து வந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு மாதம் 2,500 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்து வந்தது.
மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்ட கலிதா மாஜி, கடந்த 2018-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவரது களப்பணியைக் கவனித்த கட்சித் தலைமை, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தது. அந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த போதிலும், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் அபேதானந்தா தாண்டரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.
இருப்பினும், அந்தத் தோல்வியால் மனம் தளராத கலிதா மாஜி, தொடர்ந்து மக்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதே அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முறை அத்தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கலிதா மாஜிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். தேர்தல் முடிவில் 1,07,692 வாக்குகளைப் பெற்று அவர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
சாதாரண நிலையில் இருந்த ஒரு பெண்ணை வேட்பாளராக முன்னிறுத்தி, இன்று சட்டமன்ற உறுப்பினராக உயர்த்தியுள்ளதன் மூலம் சமூக நீதியை பாஜக நிலைநாட்டியுள்ளதாகப் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டு வேலை செய்த பெண்ணை எம்.எல்.ஏ-வாக்கியுள்ள கட்சித் தலைமைக்குத் தொண்டர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். தற்போது கலிதா மாஜி தொடர்பான செய்திகளும், புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
