Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி சாலை விபத்தில் காலமானார்: திரையுலகம் கடும் அதிர்ச்சி
Entertainment

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி சாலை விபத்தில் காலமானார்: திரையுலகம் கடும் அதிர்ச்சி

By MadushanMay 6, 2026

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளர்களில் ஒருவரும், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அதிபருமான ஆர்.பி.சவுத்ரி (72), ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மாலை காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களைத் தயாரித்த இவரின் மறைவு, இந்தியத் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த ஆர்.பி.சவுத்ரி, தனது சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் சமீபத்தில் அங்கு சென்றிருந்த அவர், நேற்று மாலை காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. அதைக் கவனித்த ஓட்டுநர் காரைத் திருப்ப முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ஏற்பட்ட கடும் அதிர்ச்சியால் ஆர்.பி.சவுத்ரிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் 1990-களில் பல புதிய இயக்குநர்களையும், நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாக, விக்ரமன் இயக்கத்தில் 'புதுவசந்தம்', கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் 'புரியாத புதிர்' போன்ற படங்களின் மூலம் பல திறமையாளர்களைத் திரையுலகிற்குத் தந்தார். சரத்குமார் நடித்த 'நாட்டாமை', 'சூரியவம்சம்', விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த 'பூவே உனக்காக', 'லவ் டுடே' போன்ற எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார்.

தற்போது விஷால் இயக்கி, நடிக்கும் 'மகுடம்' திரைப்படம் இவரது நிறுவனத்தின் 99-வது படமாகத் தயாராகி வருகிறது. தனது 100-வது திரைப்படத்தைப் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவாக இருந்தது. அதற்கிடையில் 'சூரியவம்சம்' படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கும் பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தார். மறைந்த ஆர்.பி.சவுத்ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் பிரபல நடிகர் ஜீவா என நான்கு மகன்கள் உள்ளனர். இவரது மறைவுக்குத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio