Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கிராமப்புற வீதிகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு விசேட அவதானம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி  உறுதி
Sri Lanka

அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கிராமப்புற வீதிகள் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு விசேட அவதானம்: மட்டக்களப்பில் ஜனாதிபதி உறுதி

By MadushanMay 20, 2026

கிராமப்புற வீதி நிர்மாணம், குடிநீர் விநியோகம் மற்றும் திடக்கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான நீர் வழங்கல் திட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்து கலந்துரையாடி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார். இது குறித்துக் கலந்துரையாடுவதற்காக நீர் வழங்கல் சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை இப்பகுதிக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாரிய அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தற்காலிகமாக அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன், நீர் வழங்கல் சபையினால் இதுவரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்டத்தின் வீதிகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீதிகளினதும் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்திற்குள்ளேயே ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகள், வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள மேய்ச்சல் தரைகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு நீண்டகாலமாக முன்வைக்கப்படும் கோரிக்கை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண மீன்பிடித் தொழிலின் மையமாக விளங்கும் வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான கலங்கரை விளக்கம் ஒன்றின் தேவைப்பாடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான முன்னேற்பாடுகள், யானை-மனித மோதலைக் குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் செயற்பாடுகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள், மாவட்டத்தின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

'தித்வா' சூறாவளியினால் சேதமடைந்த வயல்நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 'சமூக சக்தி' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம், அதன் முன்னேற்றம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio