Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரான் அமைச்சரிடம் சீனா வலியுறுத்தல்
World

ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரான் அமைச்சரிடம் சீனா வலியுறுத்தல்

By MadushanMay 6, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பின்னர் முதன்முறையாகச் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியை, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ சந்தித்துப் பேசினார். புதன்கிழமை (06) பீஜிங்கில் நடைபெற்ற இந்த இருதரப்பு அவசரப் பேச்சுவார்த்தையின் போது, உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியப் பாதையாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணையை' உடனடியாகத் திறக்குமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கச் சீனா உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் வாங் யீ, மத்திய கிழக்கில் நிலையானதொரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதே தற்போதைய அவசர முன்னுரிமையாகும் எனக் குறிப்பிட்டார். மீண்டும் மோதல்கள் வெடிப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விதித்துள்ள தடைகள் மற்றும் கடற்படை முற்றுகைகள் காரணமாக, உலகின் பெரும்பாலான மசகு எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய வாங் யீ, "ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான மற்றும் இயல்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சர்வதேச சமூகம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகத்தின் இந்த வலுவான கோரிக்கைக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் எனச் சீனா நம்புகிறது" எனத் தெரிவித்தார்.

சீனா தனது மசகு எண்ணெய் தேவையில் சுமார் 12 சதவீதத்தை (தினமும் 1.38 மில்லியன் பேரல்கள்) ஈரானிடமிருந்தே இறக்குமதி செய்கிறது. இதனால் இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது சீனப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்ற கொள்கைப்பாட்டில் உறுதியாக இருப்பதற்குச் சீனா பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், சீனாவுடனான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என அமைச்சர் அராக்சி உறுதியளித்துள்ளார்.

அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையே பீஜிங்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஈரான் போர் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான் அமைச்சருடன் சீனா நடத்தியுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio