
கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை கொடூரக் கொலை: உடற்கூராய்வில் வெளியான பகீர் தகவல்கள்!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் பிறப்புறுப்பு உட்பட 51 இடங்களில் காயங்கள் இருந்தது உடற்கூராய்வில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம், நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அகிலா (24). இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தனது ஒன்றரை வயது மகன் அர்ஷித்துடன் வசித்துவந்த அகிலாவுக்கு, அஸ்கர் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு குழந்தை அர்ஷித் இடையூறாக இருந்ததால், வளர்ப்புத் தந்தையான அஸ்கர், குழந்தையைத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். சிகரெட்டால் சுடுவது, கடுமையாக உதைப்பது என சித்திரவதைகள் தொடர்ந்தபோதும், தாய் அகிலா அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மே 29 அன்று, குழந்தை சுயநினைவின்றி இருந்ததைக் கண்டு அஸ்கர் அவனை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, 'சாப்பிடும்போது உணவு தொண்டையில் சிக்கிக்கொண்டது' எனக் கூறி நாடகமாடியுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் எஸ்.ஏ.டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
குழந்தையின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருந்ததால், மருத்துவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உடற்கூராய்வு, இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. குழந்தையின் பிறப்புறுப்பு உட்பட 51 இடங்களில் காயங்கள் இருந்ததும், கை, கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும், உடல் முழுவதும் சிகரெட்டால் சுட்ட காயங்களும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உள் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததும் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது.
இந்த அதிர்ச்சித் தகவல்களை அடுத்து, நெடுமங்காடு காவல்துறையினர் அஸ்கர் மற்றும் அகிலாவிடம் நடத்திய தீவிர விசாரணையில், அஸ்கர் குழந்தையை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய் அகிலாவும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை சித்திரவதை செய்து கொன்ற இச்சம்பவம், கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
