Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

சட்டப்பேரவைத் தேர்தல்: "தனித்து நின்று சாதித்த மகன்" - நெகிழ்ச்சியுடன் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்!
India

சட்டப்பேரவைத் தேர்தல்: "தனித்து நின்று சாதித்த மகன்" - நெகிழ்ச்சியுடன் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்!

By MadushanMay 4, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பல தொகுதிகளில் வலுவான முன்னிலையைப் பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தவெக 105-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து, வெற்றியை நோக்கி முன்னேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் குறித்து நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "விஜய் தான் முதல்வர் ஆக வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அதற்கான களப்பணிகளையும் அவர் மிகத் தீவிரமாக ஆற்றினார். இன்று கிடைத்து வரும் இந்த முன்னிலையைக் கண்டு என்னை விட என் மனைவி ஷோபா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

விஜய்யின் தன்னம்பிக்கை குறித்துப் பகிர்ந்த அவர், "விஜய் ஆரம்பத்திலிருந்தே அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார். 'வெற்றி நமதே' என்ற மந்திரமே அவரது தாரக மந்திரமாக இருந்தது. தமிழக மக்கள் விஜய்யை தங்களது குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கின்றனர். ஒரு அப்பாவாக எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதைவிட ஒரு தந்தைக்கு வேறு என்ன வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், விஜய்யின் இந்த அரசியல் பயணத்தில் இருந்த சவால்களைக் குறிப்பிட்ட எஸ்.ஏ.சி, "எவ்வளவோ எதிர்ப்புகள் மற்றும் சோதனைகளைத் தாண்டி விஜய் இன்று வெற்றி பெற்றுள்ளார். இது சாதாரண வெற்றி இல்லை. யாருடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று களம் கண்டு வெற்றி பெற்றதே மிகப் பெரிய விஷயம்" என்று பெருமிதத்துடன் கூறினார். விஜய்யின் இந்த அரசியல் அதிரடி, தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio