
நிரந்தர நியமனத்தில் அநீதி: யாழ். போதனா வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்!
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், புதிய ஆட்சேர்ப்புக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சுகாதாரத் தொண்டர்கள் மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி வஞ்சித்துவிட்டதாக அவர்கள் கண்ணீருடன் குற்றம்சாட்டினர்.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியமின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நிலையில், தங்களின் உழைப்பு உதாசீனப்படுத்தப்படுவதாகக் கூறி வைத்தியசாலைக்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். பின்னர், அங்கிருந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், “கொழும்பில் சுகாதார அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தற்போது சேவையிலுள்ள 120 தொண்டர்களுக்கும் சேவை மூப்பின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது” என்றனர்.
“நாளை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 92 பேரில், வெறும் 15 பேர் மட்டுமே தற்போது சேவையாற்றும் தொண்டர்கள். எஞ்சிய 77 பேரும் எவ்வித முன் அனுபவமும் இல்லாத வெளியாட்கள். இது எங்களின் பல ஆண்டு கால சேவையை அவமதிக்கும் செயல்” என அவர்கள் வேதனை வெளியிட்டனர்.
மேலும், ஆட்சேர்ப்பு முறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். “2019ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி, அதற்கு முன்னர் 180 நாட்கள் சேவையாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய பட்டியலில் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது அப்பட்டமான மோசடி” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நடைபெறவிருக்கும் நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்திவிட்டு, பல ஆண்டுகளாகச் சேவையாற்றி வரும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் சுகாதாரத் தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.
