
தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜனநாயகத் திருவிழாவின் முக்கியக் கட்டமான வாக்கு எண்ணிக்கை, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே முன்னிலை நிலவரங்களில் பெரும் திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது பல்வேறு தொகுதிகளின் அதிகாரப்பூர்வ வெற்றி விவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகளில் யாரும் எதிர்பாராத விதமாக, பெரும்பாலான தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள தவெக, சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, நட்சத்திரத் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு, அவரைத் தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்தத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தனது முதல் தேர்தலிலேயே இரட்டை வெற்றியைப் பதிவு செய்த விஜய், கட்சியின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று, ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் விஜய்க்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
