
"மத்தியில் உள்ள பாஜக அரசு விரைவில் அகற்றப்படும்" - மம்தா பானர்ஜி அதிரடி முழக்கம்!
"வரும் நாட்களில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசு வேரோடு அகற்றப்படும்" என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜாகவிற்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தேர்தலில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்எல்ஏ-க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மம்தா பானர்ஜி இவ்வாறு ஆவேசமாகப் பேசினார்.
அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது:
"தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பாஜக அரசு, திட்டமிட்டு சிறுபான்மையின மக்களைக் குறிவைத்து ஒடுக்கி வருகிறது. ஏழை எளிய நடைபாதை வியாபாரிகளின் கடைகள் புல்டோசர்கள் கொண்டு இரக்கமின்றி இடிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய அடக்குமுறைச் செயல்களின் மூலம் இந்த அரசு நமது நாட்டின் உன்னதமான அரசியலமைப்பை முற்றிலும் சிதைத்துக் கொண்டிருக்கிறது.
மாநிலத்தில் தங்களது ஆட்டத்தை பாஜாகவினர் காட்டினாலும், தேசிய அளவில் அவர்களுக்கு வீழ்ச்சி நிச்சயம் என்பதைச் சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, இதேபோல வரும் நாட்களில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் நீடித்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு ஒட்டுமொத்தமாக அகற்றப்படும் என்றும் மிகத் தீவிரமாகத் தெரிவித்தார். தேர்தலுக்குப் பிந்தைய திரிணமூல் காங்கிரஸின் இந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் மம்தாவின் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
