Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

கேரள முதல்வர் தேர்வு: காங்கிரஸ் மேலிடத்திற்கு முழு அதிகாரம் அளித்து எம்எல்ஏக்கள் தீர்மானம்
India

கேரள முதல்வர் தேர்வு: காங்கிரஸ் மேலிடத்திற்கு முழு அதிகாரம் அளித்து எம்எல்ஏக்கள் தீர்மானம்

By MadushanMay 8, 2026

கேரளாவின் அடுத்த முதலமைச்சரைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் கட்சித் தலைமைக்கே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வழங்கியுள்ளதாக மேலிடப் பார்வையாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேரள காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.

கடந்த மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலப் பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷியுடன் இணைந்து கேரளா செல்லுமாறு அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, மே 7-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர்கள் ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் தனித்தனியாகப் பேசி, சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவி குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் கட்சித் தலைமைக்கே வழங்கும் ஒருவரித் தீர்மானம் அனைத்து எம்எல்ஏக்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் நகல் மற்றும் எம்எல்ஏக்களின் கருத்துக்கள் அடங்கிய விரிவான அறிக்கை தற்போது காங்கிரஸ் தலைவர் தலைமையிலான மேலிடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலிடம் தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என்று அஜய் மக்கான் தெரிவித்தார்.

இதற்கிடையில், காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா மற்றும் கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சன்னி ஜோசப் ஆகியோர் இன்று டெல்லி சென்று மேலிடத்தைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் ஒருவரே சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளாவின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் அறிவிக்கப்பட்டவுடன், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio