Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’ எச்சரிக்கை: அதிபருக்கு பாதிப்பு ஏற்பட்டால் தானாகவே வெடிக்கும் அணு ஆயுதங்கள்!
World

வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’ எச்சரிக்கை: அதிபருக்கு பாதிப்பு ஏற்பட்டால் தானாகவே வெடிக்கும் அணு ஆயுதங்கள்!

By MadushanMay 12, 2026

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டாலோ அல்லது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘டெட் ஹேண்ட்’ (Dead Hand) என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன அணு ஆயுதக் கட்டளை அமைப்பானது, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ‘டெட் ஹேண்ட்’ தொழில்நுட்பம் புதியது அல்ல. கடந்த 1980-களில் சோவியத் யூனியன் (தற்போதைய ரஷ்யா) இத்தகைய அமைப்பை முதன்முதலில் உருவாக்கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுதத் தாக்குதலால் நாடு அழிந்து, தலைவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், மனிதத் தலையீடு இன்றியே தானாகச் செயல்பட்டு எதிரி நாடுகள் மீது அணு ஏவுகணைகளை ஏவுவதே இதன் சிறப்பம்சமாகும். தற்போதைய ரஷ்ய அரசு இந்த அமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பித்துள்ள நிலையில், அதே பாணியை வடகொரியாவும் தற்போது கையில் எடுத்துள்ளது.

இது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகையில், வடகொரியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு திருத்தங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ரஷ்யாவைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் படி, அதிபர் கிம் ஜாங் உன்னின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், கணினிமயமாக்கப்பட்ட ‘டெட் ஹேண்ட்’ அமைப்பு உடனடியாகச் செயல்படத் தொடங்கும். இது எதிரி நாடுகளின் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து அணு ஆயுதங்களைத் தானாகவே ஏவும் வல்லமை கொண்டது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட நிகழ்வு போன்ற சர்வதேச அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது. எனினும், இந்தத் தன்னிச்சையான அணு ஆயுதத் தாக்குதல் முறை மிகவும் ஆபத்தானது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இந்த அமைப்பால் அண்டை நாடான தென்கொரியாவுக்குப் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மேலும், வடகொரியாவிடம் உள்ள 15,000 கி.மீ தூரம் வரை பாயும் ‘ஹ்வாசாங்’ ரக ஏவுகணைகள், அமெரிக்கா போன்ற தொலைவில் உள்ள நாடுகளின் பாதுகாப்பிற்கும் நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio