Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட மே தினப் பேரணி: இனவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்சி
Sri Lanka

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட மே தினப் பேரணி: இனவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்சி

By MadushanMay 1, 2026

தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்லடிப் பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மட்டக்களப்பு நகரின் பிரதான வீதிகள் எங்கும் மக்கள் அலை மோதியதோடு, தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி அமைந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி, தேசிய மக்கள் சக்தி இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மே தினத்தைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாகத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் பறங்கியர் என அனைத்து இன மக்களும் இணைந்து நகரின் மையப்பகுதியில் இந்த மே தினத்தைக் கொண்டாடுவது ஒரு முக்கியமான மைல்கல்லாகும் என அவர் சுட்டிக்காட்டினார். இது வெறும் தொழிலாளர் தினம் மட்டுமல்ல, மதவாதத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு போராட்ட நாள் என்றும் அவர் வர்ணித்தார்.

கடந்த கால சவால்கள் குறித்துப் பேசிய அமைச்சர், "2024-ஆம் ஆண்டு நாம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாடு பாரிய கடன் சுமையிலிருந்தது. எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருந்தனர்; விவசாயிகளுக்குப் பசளை இருக்கவில்லை; அரச ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு இல்லை; மலையகத் தொழிலாளர்கள் போதிய வருமானமின்றித் தவித்தனர். இவ்வாறான இக்கட்டான சூழலில்தான் இந்த நாடு எம்மிடம் கிடைத்தது. அப்போது எதிர்க்கட்சியினர், தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியைக் கொடுத்தால் 6 மாதங்களில் நாடு வீழ்ச்சியடையும் எனக்கூறினர். ஆனால், அந்த நிலைமையை மக்கள் மாற்றியமைத்துள்ளனர்," என்றார்.

கடந்த காலங்களில் நிலவிய அடக்குமுறைகள் குறித்துப் பேசிய அவர், மட்டக்களப்பில் முன்பு நிலவிய சட்டவிரோத ஆதிக்கங்களைச் சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் பின்னர் இங்கு ஒரு சிலரின் ஆதிக்கமே அமுலில் இருந்ததாகவும், விவசாயிகளிடம் கப்பம் வாங்கப்பட்டு விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், இன்று நாட்டில் இரண்டு விதமான சட்டங்கள் இல்லை எனவும், பயமுறுத்தல்களுக்கு இடமளிக்கப்படாது வடக்கு முதல் தெற்கு வரை ஒரே நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். தங்களுக்குப் பொருளாதாரத்தை வழிநடத்தத் தெரியாது என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், இன்று கடன்கள் முறையாக மீளச் செலுத்தப்பட்டு நாடு முன்னோக்கி நகர்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio