
இலங்கையின் கடற்றொழில் துறைக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பு: தூதுவர் இசோமாடா அகியோ உறுதி
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவரின் விசேட அழைப்பின் பேரில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தூதுவரின் உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு விஜயம் செய்திருந்த போதே இவ்வுறுதிமொழி வழங்கப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பினருக்கும் இடையில் மிகவும் சிநேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜப்பான் தூதுவருடன் இராப்போசனத்திலும் கலந்துகொண்டார். இச்சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
கலந்துரையாடலின் போது, ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விரிவான விளக்கமளித்தார். அத்துடன், கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான வியூகங்கள் குறித்தும் தூதுவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சரின் விளக்கங்களைக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் தங்குதடையின்றி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த முக்கிய சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித்த கமல் ஜினதாச, அமைச்சரின் பிரத்யேக செயலாளர் ஸ்ரீதரன் பூலோகராஜா மற்றும் அமைச்சரின் இணைப்பு செயலாளர் கேசன் மதுசங்க ஆகியோரும் உடனிருந்தனர்.
