
வெசாக் தினத்திற்கு முன்னுரிமை: அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி விலகல் - முன்னாள் ஜனாதிபதி ரணில் வாழ்த்து
ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு அமைவாக, இவ்வருடம் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுவதால், சமய வழிபாடுகளுக்கு முதலிடம் வழங்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி நிற்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணிக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட வாழ்த்து கடிதத்திலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றும் பல நாடுகள், வெசாக் தினத்திற்கு முந்தைய தினமான ஏப்ரல் 30ஆம் திகதி முதலே சமய வழிபாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இலங்கையும் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு சமயக் கிரியைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க, பௌர்ணமி தினமான மே முதலாம் திகதி சமய நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இது குறித்து துறவிகள் மற்றும் பொதுமக்களுடன் ஏற்கனவே கலந்தாலோசித்து திட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் விவரித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டிலும் தேசிய வெசாக் கொண்டாட்டங்களுடன் மே தினம் மோதுவதைத் தவிர்க்க, மே தினக் கொண்டாட்டங்கள் மே 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட வரலாற்றையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
சமய வழிபாடுகளுக்கு மதிப்பளித்து பௌர்ணமி தினத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும், மே முதலாம் திகதி பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ள ஏனைய அரசியல் சக்திகளின் முன்னெடுப்புகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி வெற்றியளிக்க வாழ்த்து கூறியதுடன், முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டமைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
