
தமிழகத் தலைவர்களை வைத்து சமூக ஊடகங்களில் வன்மத்தைக் கக்குவது தவிர்க்கப்பட வேண்டும்: சட்டத்தரணி சுகாஸ் வேண்டுகோள்
யாழ்ப்பாணம்: ஈழத் தமிழர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை முன்னிறுத்தி, மாற்றுத் தரப்பினர் மீது வன்மத்தைப் பரப்புவது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கணகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத் தலைவர்களுடன் உறவுகளைப் பேணுவது அவசியமானது என்றாலும், அவர்களை எதிர்ப்பதற்கு முன்னதாகப் பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள சமூக வலைத்தளப் பதிவில், "மாண்புமிகு விஜய் அவர்களா? அல்லது மரியாதைக்குரிய சீமான் அவர்களா?" என்பதுதான் இன்று ஈழத்தமிழர்களின் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் விரும்பும் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தொடங்கி, தற்போது அது மாற்றுத் தரப்பு மீது வன்மத்தைக் கக்கும் நிலைக்கு நகர்ந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். விடுதலையை வேண்டி நிற்கும் ஈழத் தமிழினத்திற்கு, இத்தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவும் தவிர்க்க முடியாதது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலாற்று அனுபவங்களை நாம் பாடமாகக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள சுகாஸ், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தபோதிலும், அவர்கள் எத்தருணத்திலும் எம்.ஜி.ஆரின் அரசியல் போட்டியாளரான முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களைப் பகிரங்கமாக எதிர்க்கவோ, விமர்சிக்கவோ இல்லை என்பதை நினைவூட்டியுள்ளார். எனவே, ஈழத்தில் உள்ள விஜய் அவர்களின் ரசிகர்கள் சீமான் அவர்களைத் தூற்ற வேண்டியதில்லை என்றும், அதேபோல் சீமான் அவர்களின் ஆதரவாளர்கள் விஜய் அவர்களை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், இவ்வாறான மோதல்களைப் பயன்படுத்தி ஈழத் தமிழினத்தைக் கூறுபோடவும், இழைக்கப்பட்ட இனப்படுகொலையைத் திசைதிருப்பவும் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களான அரசியல் கோமாளிகளும் திட்டமிட்டு வருவதாக அவர் எச்சரித்துள்ளார். இத்தகைய சதிகளுக்கு ஈழத் தமிழ் இளைஞர்கள் பலிக்கடாவாவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆட்சிப் பணி சிறக்கட்டும், அண்ணன் சீமானின் தமிழ்த் தேசியப் பணி செழிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி சுகாஸ், இலங்கை அரசினதும் அதன் முகவர்களினதும் கூத்துக்களை ஈழத் தமிழினம் இனியாவது உணர்ந்து தெளிய வேண்டும் என்றும், 'இனத்தின் விடுதலை' என்ற ஒற்றை இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தனது பதிவில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
