Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கோரிக்கை!
Sports

எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கோரிக்கை!

By MadushanMay 18, 2026

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, வரும் மே 31 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் 13 முக்கிய மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில், மொத்தமுள்ள 74 போட்டிகளில் இதுவரை 62 போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. நடப்பு சீசனில் ஐபிஎல் போட்டிகளைக் காண ரசிகர்களிடையே ஆர்வம் சற்று குறைந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது எஞ்சிய போட்டிகளைப் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என்ற புதிய கோரிக்கை எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். இதன் பின்னணியில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எஞ்சிய ஐபிஎல் போட்டிகளைப் பார்வையாளர்கள் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான மைதானங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சிடிஐ எழுதிய கடிதம்

சிடிஐ (CTI) அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"2026 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து, பங்கேற்கும் கிரிக்கெட் அணிகள் போட்டிகளுக்காக இதுவரை விமானம் மற்றும் சாலை வழியாக லட்சக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்திருக்கக்கூடும். அணிகளின் போட்டி அட்டவணைகள் மற்றும் வெவ்வேறு நகரங்களில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் விதத்தைக் கருத்தில் கொண்டால், தளவாடக் கண்ணோட்டத்தில் இந்தப் பயணம் தேவையானது தான்.

இருப்பினும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில், இந்த விரிவான விமானப் பயணம் இந்திய அரசாங்கத்திற்கு கூடுதல் பொருளாதார மற்றும் எரிபொருள் சுமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளைப் பார்வையாளர்கள் இல்லாமல், குறைந்த எண்ணிக்கையிலான மைதானங்களில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக கொரோனா காலத்திலும் கூட, ஏற்பாட்டாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மைதானங்களில் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்."

மேலும் அந்த அறிக்கையில், ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்களின் பயணங்களுக்காக கிட்டத்தட்ட 50,000 முதல் 70,000 லிட்டர் வரையிலான விமான எரிபொருளைப் பயன்படுத்துகின்றன என்றும், ஒரு போட்டிக்கு சராசரியாக சுமார் 50,000 பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருவதால் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலும், டீசலும் செலவிடப்படுகின்றன என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய இக்கட்டான சூழலில், ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை மறு அட்டவணைப்படுத்துவது லட்சக்கணக்கான லிட்டர் எரிபொருளைச் சேமிப்பதோடு, நாட்டின் மீதான சுமையையும் கணிசமாகக் குறைக்கும் என சிடிஐ வலியுறுத்தியுள்ளது.

ஐபிஎல் தலைவர் அருண் தூமல் விளக்கம்

இந்த விவகாரம் குறித்து ஐபிஎல் தலைவர் அருண் தூமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிக் கூறிய அவர்:

இதுவரை பிசிசிஐ (BCCI) அமைப்பிற்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும், கோரிக்கையும் வரவில்லை.

சுதந்திரமான அமைப்புகளுக்கு சில பொதுவான விஷயங்களில் அவர்களின் சொந்தக் கருத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், நாங்கள் இந்திய அரசாங்கத்தின் விதிகளுக்குப் பொறுப்புடையவர்கள்.

மத்திய அரசாங்கத்திடமிருந்து இது குறித்து ஏதேனும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலோ அல்லது தகவலோ வந்தால், அதை நாங்கள் நிச்சயம் தீவிரமாக ஆராய்ந்து, அதன்படியே செயல்படுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி ரசிகர்களுடன் நடக்குமா அல்லது மூடிய அரங்குகளுக்குள் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Boom Tamil
Live NowBoom Tamil Radio