
'பாகிஸ்தானுக்கு இனப்படுகொலை வரலாறு உண்டு': ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா கடும் தாக்கு!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) நடைபெற்ற உயர்மட்ட விவாதத்தில், பாகிஸ்தான் நாட்டின் செயல்பாடுகளை இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். "நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட களங்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான்" என்று அவர் சர்வதேச அரங்கில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு சபையில் 'ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் அண்மையில் திறந்த விவாதம் ஒன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக சுட்டிக்காட்டினார்.
அவர் பேசுகையில், "பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு, இந்த உயர் சபையில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுவது முற்றிலும் முரண்பாடானது. உலக அளவில் பல்வேறு வன்முறைகளுக்கும் இனப்படுகொலைகளுக்கும் காரணமாக இருந்த ஒரு கறைபடிந்த வரலாறு அந்த நாட்டிற்கு உண்டு" என்று சாடினார்.
மேலும், சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் தாக்குதல் ஒன்றையும் அவர் இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்த ஆண்டு மார்ச் மாதம், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் அமைதி, சிந்தனை மற்றும் கருணையின் காலமாகப் போற்றப்படும் புனித ரமலான் மாதத்தில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 'உமித் போதை மறுவாழ்வு மருத்துவமனை' மீது பாகிஸ்தான் ஒரு காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
"எந்த வகையிலும் ஒரு ராணுவ இலக்காகக் கருத முடியாத, முற்றிலும் பொதுமக்களுக்கான ஒரு மருத்துவமனையின் மீது பாகிஸ்தான் நடத்திய கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற தாக்குதலை உலகம் இன்னும் மறந்துவிடவில்லை. இந்த கொடூரத் தாக்குதலில் 269 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர், 122 பேர் படுகாயமடைந்தனர்," என்று ஹரிஷ் பர்வதனேனி தெரிவித்தார்.
பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்துப் பேசும் பாகிஸ்தானின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்திய இந்தியாவின் இந்த அதிரடி பேச்சு, தற்போது சர்வதேச தூதரக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
