
திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு ஏற்படும்: நடிகர் விஷால் அதிரடி கருத்து
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து கூட்டணி அமைத்தால், அதன் விளைவு பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பேரழிவையும் ஏற்படுத்தும் என்று நடிகர் விஷால் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த அரசாங்கத்தை தமிழக வெற்றிக் கழகம் அமைக்கத் தவறினால், ஒருவேளை திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், அது வாக்காளர்களின் நம்பிக்கைக்கு எதிரானது என்று விஷால் குறிப்பிட்டுள்ளார். "ஒரு குடிமகனாகவும் வாக்காளராகவும் நான் கருதுவது என்னவென்றால், இத்தகைய அதிர்ச்சிகரமான கூட்டணி அமைந்தால் அதன் விளைவு மிக மோசமானதாகவும், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இருக்கும்" என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகவும் விஷால் குரல் கொடுத்துள்ளார். கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், பெரும்பான்மைக்கு நெருக்கமான இடங்களைப் பெற்றுள்ள விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் ஏன் அழைக்கத் தயங்குகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் தீர்ப்புக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆளுநர் ஆட்சியை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே தமிழகத்திற்குத் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்துடன் விஜய் ஆளுநரைச் சந்தித்த பின்னரும், 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலம் இல்லை எனக் கூறி ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், "அன்பிற்குரிய விஜய், நீங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்பீர்கள்" என விஷால் தனது நம்பிக்கையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
