
கொழும்பில் டச்சுப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி: நெதர்லாந்து தூதரகம் நினைவு தினத்தை அனுஷ்டித்தது
கொழும்பில் உள்ள ஜாவத்தை மயானத்தில் அமைந்துள்ள பொதுநலவாய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகில், இலங்கை மண்ணில் அடக்கம் செய்யப்பட்டுள்ள டச்சுப் போர் தியாகிகளைக் கௌரவிக்கும் வகையில், இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் இன்று (மே 4) நினைவு தினத்தை அனுஷ்டித்தது. இந்நிகழ்வில் நெதர்லாந்து பதில் தூதுவர் இவான் ரூட்ஜென்ஸ் கலந்துகொண்டு, அங்குள்ள போர் நினைவுச் சின்னத்திற்கும், போரில் உயிரிழந்த டச்சு நாட்டவர்களின் தனிப்பட்ட கல்லறைகளுக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மொத்தம் 36 டச்சு நாட்டவர்களின் உடல்கள் கொழும்பு, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து, நெதர்லாந்து ஒவ்வோர் ஆண்டும் மே 4ஆம் திகதி உயிரிழந்த தன் நாட்டு வீரர்களையும் குடிமக்களையும் பாரிய அளவில் நினைவுகூர்ந்து வருகிறது. 1961ஆம் ஆண்டு முதல், இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட 102,000 டச்சு யூதர்கள் மற்றும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், அதற்குப் பிறகு நடந்த பல்வேறு மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகளில் உயிரிழந்த டச்சு வீரர்களும் இந்நாளில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
இதேவேளை, நெதர்லாந்து நாட்டிலும் இன்று இரவு 8 மணிக்கு நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகழ்மிக்க டேம் சதுக்கத்தில் (Dam Square), அந்நாட்டு மன்னர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் இதற்கான பிரதான அஞ்சலிச் சடங்குகள் நடைபெறுகின்றன. அதேநேரம், நெதர்லாந்தின் அனைத்து நகரங்களிலும் உள்ளூர் மட்டத்திலான நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
