
‘விலைவாசி நாயகர் மோடி மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார்’ - பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காங்கிரஸ் கடும் விமர்சனம்
நடப்பு தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்று மீண்டும் உயர்த்தியுள்ளன. ஒரே வாரத்தில் இன்று இரண்டாவது முறையாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 90 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 4 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த தொடர் விலை உயர்வைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விலைவாசி நாயகரான மோடியின் சாட்டை அடி மீண்டும் மக்கள் மீது விழுந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் மோடி பெட்ரோல், டீசல் விலையை 4 ரூபாய் வரை உயர்த்தியுள்ளார். இந்த விலை உயர்வுடன் சேர்த்து, நாடு முழுவதும் பெட்ரோல் விலை 109 ரூபாயாகவும், டீசல் விலை 96 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. தேர்தல்கள் அனைத்தும் முடிந்துவிட்டதால், இந்த 'விலைவாசி நாயகர்' மக்களை இன்னும் அதிகமாகச் சுரண்டுவார்" என்று மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளது.
இன்றைய விலை உயர்வின் காரணமாக, தமிழக தலைநகர் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 104.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 86 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.11 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 97.77 ரூபாயில் இருந்து 98.64 ரூபாயாகவும், டீசல் விலை 90.67 ரூபாயில் இருந்து 91.58 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 109.70 ரூபாய்க்கும், டீசல் விலை 94 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அடுத்தடுத்த விலை உயர்வு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
