Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் - பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
India

மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் - பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

By MadushanMay 5, 2026

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறை வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பாஜகவினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதாகவும், கட்சி அலுவலகங்களைச் சூறையாடுவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் (TMC) பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரங்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அலிபுர்துவார் பகுதியில் மூதாட்டி ஒருவர் முகத்தில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் படுத்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள அக்கட்சி, "பட்டப்பகலில் அப்பாவி மக்களைத் தாக்கவும், கலவரம் செய்யவும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்கள் தொண்டர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வன்முறையைத் தடுக்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மத்தியப் படைகள் எங்கே போயின என்றும், பாஜகவின் வன்முறை முகத்தை மேற்கு வங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

மற்றொரு வீடியோவில், ஜல்பைகுரி வார்டு 14-ல் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தை சமூக விரோதிகள் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அக்கட்சி நிர்வாகிகளால் கூறப்படுகிறது. இதேபோல் கொல்கத்தாவின் டோலிகஞ்ச், கஸ்பா மற்றும் ஹவுராவின் பரநகர், கமர்ஹாட்டி ஆகிய பகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், தனது கட்சித் தொண்டர்கள் மற்றும் சொத்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கட்சியினர் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறை குறித்து உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பாரதிய ஜனதா கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும் தங்கள் கட்சித் தொண்டர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சித் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, திரிணமூல் காங்கிரஸின் உட்கட்சிப் பூசலால் இத்தகைய மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio