
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்: வல்வெட்டித்துறையில் கொட்டும் மழையிலும் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு வாரத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (12) வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் திரண்ட பல்கலைக்கழக மாணவர்கள், இறுதிப் போரின் போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் பசியையும் நினைவுகூரும் வகையில் இந்தக் கஞ்சியினை தயாரித்து வழங்கினர்.
பகுதியின் வானிலை சீரற்றுக் காணப்பட்ட போதிலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மாணவர்கள் கஞ்சியினைப் பரிமாறினர். அதேவேளை, அப்பகுதியால் சென்ற பொதுமக்களும் மழையில் நனைந்தவாறே நீண்ட வரிசையில் நின்று கஞ்சியினைப் பெற்றுக்கொண்டதைக் காணமுடிந்தது.
யுத்தத்தின் இறுதி நாட்களில் கஞ்சியே மக்களின் உயிர்நாடியாக விளங்கிய வரலாற்றுத் தழும்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கோடும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த நினைவேந்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
