Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

அவுஸ்திரேலிய மாணவர் வீசா: இலங்கை மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு
Sri Lanka

அவுஸ்திரேலிய மாணவர் வீசா: இலங்கை மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

By MadushanMay 5, 2026

உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களின் வீசா விண்ணப்பங்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வருவது கல்வித்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடியேற்றக் கொள்கைகளை அண்மையில் கடுமையாக்கியதே இந்த நிலைமைக்கு முதன்மைக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. சர்வதேச மாணவர் சேர்க்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீசா நடைமுறைகளை அவுஸ்திரேலியா தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், தகுதியுள்ள பல மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய உள்நாட்டு விவகாரத் துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களில் 38 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சர்வதேச ரீதியில் மாணவர் வீசா நிராகரிப்பு விகிதம் பெப்ரவரி மாதத்தில் 32.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த மாதாந்திர நிராகரிப்பு விகிதமாகும். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இந்த பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நேபாளம் 65 சதவீத நிராகரிப்புடன் முதலிடத்தில் உள்ளதுடன், பங்களாதேஷ் (51%), இந்தியா (40%), இலங்கை (38%) மற்றும் பூட்டான் (36%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களில் உள்ள குளறுபடிகளே இந்த அதிரடி நிராகரிப்புகளுக்கு முக்கியக் காரணம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக போலியான கல்விச் சான்றிதழ்கள், நம்பகத்தன்மையற்ற வங்கி மற்றும் நிதி ஆவணங்கள், தவறான பணி அனுபவச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், படிப்பை முடித்த பின்னர் மாணவர்கள் மீண்டும் தமது தாய்நாடு திரும்புவதற்கான போதிய உத்தரவாதம் மற்றும் தெளிவான எதிர்காலத் திட்டங்கள் இல்லாமையும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக் காரணமாகக் கூறப்படுகின்றன.

இலங்கை மாணவர்களின் உயர்கல்விக்கான முக்கிய இலக்கு நாடாக அவுஸ்திரேலியா விளங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போதைய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான ஆவணச் சரிபார்ப்பு முறைகளால் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களின் வெளிநாட்டு உயர் கல்விக்கனவு கேள்விக்குறியாகியுள்ளது. முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவதும், போலி முகவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ளதாகக் கல்வியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio