Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

கர்நாடகாவில் பயங்கரம்: காவிரியாற்றில் யானைகள் சண்டையிட்டதில் சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி நசுங்கி பலி!
India

கர்நாடகாவில் பயங்கரம்: காவிரியாற்றில் யானைகள் சண்டையிட்டதில் சென்னையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி நசுங்கி பலி!

By MadushanMay 19, 2026

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த யானைகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் சண்டையில் சிக்கி, சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் கண் முன்னாலேயே நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகிற்கு சுற்றுலா சென்றிருந்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில், அவர்கள் மடிகேரியை அடுத்துள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமுக்குச் சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட யானைகள் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்து, ஆற்றுப் பகுதிக்கு அருகில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண் முன்னே நிகழ்ந்த கொடூரம்

அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 'மார்த்தாண்டா', 'கஞ்சன்' ஆகிய இரு யானைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, அவை ஒன்றையொன்று தாக்கி சண்டையிட்டுக் கொண்டன. இந்த எதிர்பாராத யானைகளின் மோதலுக்கு இடையே சிக்கிய ஜாய்சி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்த அவரது கணவர், கையில் குழந்தையை வைத்துக் கொண்டே தனது மனைவியை யானைகளிடமிருந்து மீட்க அங்கும் இங்கும் ஓடி தீவிர முயற்சி செய்தார்.

ஆனாலும், ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்ட யானைகளின் பிடியில் இருந்து அவரால் மனைவியை மீட்க முடியாமல் போனது. யானைகள் மிதித்ததில் படுகாயமடைந்த ஜாய்சி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கையில் குழந்தையுடன், மனைவியை யானைகளிடம் இருந்து மீட்க ஒரு கணவர் போராடும் இந்த நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

வனத்துறை அமைச்சர் இரங்கல் மற்றும் உத்தரவு

இந்த துயரச் சம்பவம் குறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே விடுத்துள்ள அறிக்கையில்:

"உயிரிழந்த சுற்றுலா பயணியின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் காட்டு விலங்குகளை நெருங்கவோ, தொடவோ அல்லது உணவுப் பொருட்கள் ஊட்டவோ முயலக் கூடாது. எப்போதும் விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio