
ஆட்சி அமைப்பதில் சிக்கல்: தவெக தலைவர் விஜய் நாளை முதல்வராகப் பதவியேற்பாரா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (மே 7) முதல்வராகப் பதவியேற்பதில் தற்போது இழுபறி நீடிக்கிறது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு குறித்த விவரங்களை ஆளுநரிடம் அவர் இன்னும் சமர்ப்பிக்காததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், நேற்று நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு விஜய் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், "பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவசியம். அந்த விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். எனது செயல்பாடுகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே அமையும்" என்று தெளிவுபடுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கினார். இருப்பினும், அதில் பெரும்பான்மைக்குத் தேவையான கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவு குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில், 108 இடங்களை வைத்துள்ள தவெக-வுக்கு 5 இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி மட்டுமே தனது ஆதரவை உறுதி செய்துள்ளது. சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், அவை இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. இக்கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே விஜய்யால் 119 என்ற பலத்துடன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இதனால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ள பதவியேற்பு விழா திட்டமிட்டபடி நாளை நடைபெறுமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
