
கல்விளான் கிராம மக்களின் காணி மற்றும் வீடுகள் பறிமுதல் செய்யப்படமாட்டாது: துணுக்காய் பிரதேச செயலாளர் உறுதி
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராம மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களின் தற்போதைய வீடுகள் அழிக்கப்படமாட்டாது என்றும், காணிகள் மீளப் பெற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் உறுதியளித்துள்ளார்.
நேற்று (13.05.2026) நடைபெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போதே இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுப்பதன் காரணமாக கல்விளான் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து, மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தனர். இதனைத் தவிர்க்கும் பொருட்டு, அக்கிராம மக்களை பாதுகாப்பான மாற்று இடங்களில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு கல்விளான் பகுதி பொருத்தமற்றது என்பதால் மக்களை வேறு இடங்களில் குடியேற்றுவது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டார். இருப்பினும், அங்கே மக்கள் நட்டு வளர்த்த பலந்தரு நீண்டகாலப் பயிர்களும் அவர்களின் வாழ்வாதார வளங்களும் உள்ளதால், அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய காணிகளையும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும், அவற்றை அந்த மக்களே தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலுவாக வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த துணுக்காய் பிரதேச செயலாளர், வழக்கமான சுற்றுநிருபங்களின்படி புதிய இடங்களுக்கு மக்கள் மாற்றப்படும்போது பழைய வீடுகள் இடிக்கப்பட்டு காணிகள் மீளப் பெறப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, கல்விளான் மக்களின் வீடுகளை இடிக்கப்போவதில்லை என்றும், அவர்கள் அக்காணிகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் பதிலளித்தார்.
மேலும், இடம்பெயரும் மக்களுக்குப் புதிதாக வழங்கப்படவுள்ள காணிகளுக்கு எதிர்காலத்தில் முறையான காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். எனினும், பழைய வீடுகளில் தங்கியிருக்கும்போது எதிர்காலத்தில் மீண்டும் அனர்த்தப் பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கான இழப்பீடுகள் அல்லது நிவாரணங்களை அவர்கள் கோர முடியாது என்ற கட்டுப்பாடும் இதன்போது விதிக்கப்பட்டுள்ளது.
