Advertisement

On Air

Connecting to stream...

No scheduled programming.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் - கேப்டன் பதவிக்கு ஆபத்தா?
Sports

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் - கேப்டன் பதவிக்கு ஆபத்தா?

By MadushanMay 8, 2026

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை சிட்னியில் உள்ள வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பி.எஸ்.எல் (PSL) தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக விளையாடி வந்த வார்னர், கடந்த ஏப்ரல் மாதம் இடையில் ஒரு வாரம் விடுமுறைக்காக சிட்னி சென்றிருந்தார். அப்போது ஏப்ரல் 5-ம் திகதி சிட்னி வீதிகளில் வாகனம் ஓட்டிச் சென்ற அவரை வழிமறித்த காவல்துறையினர் சோதனை நடத்தினர். அந்தப் பரிசோதனையில், வார்னர் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேற்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, டேவிட் வார்னர் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக ஆஜரான அவரது வழக்கறிஞர், வார்னர் தனது தவறை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். "நண்பர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சமூக ஒன்றுகூடலில் மூன்று கிளாஸ் ஒயின் அருந்திய பின்னர், வார்னர் வாகனம் ஓட்ட எடுத்த முடிவு தவறானது. அவர் உபர் போன்ற வாடகை வாகன சேவைகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். தன் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் முழுப் பொறுப்பேற்கிறார்" என்று வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மேலும், வார்னர் ஒரு நட்சத்திர வீரராக எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஒரு சாதாரண குடிமகனுக்கு அளிக்கப்படும் தண்டனையை ஏற்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் 24-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் (NSW) தலைமை நிர்வாகி லீ ஜெர்மன், "பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதையே நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த விவகாரம் மிகுந்த கவலையளிக்கிறது, இதை நாங்கள் மிகவும் தீவிரமாக அணுகுவோம்" என்று கூறியுள்ளார்.

தற்போது பிக் பாஷ் லீக் (BBL) தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணியின் தலைவராக வார்னர் இருந்து வருகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவரது கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வாரியம் இது குறித்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை ஜூன் மாதம் நடைபெறவுள்ள நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு எதிர்பார்க்கலாம்.

Boom Tamil
Live NowBoom Tamil Radio