
நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் முத்துக்காளை. இவருடைய மனைவி மாலதி (47). சமீபத்தில் இவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த மாலதிக்கு, திடீரென மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருந்த தன் மனைவியின் மேல்சிகிச்சைக்காக, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் உதவ வேண்டும் என்று நடிகர் முத்துக்காளை சில நாட்களுக்கு முன்பு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார்.
முத்துக்காளையின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, தமிழக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு மாலதியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த அவர், அவருக்குத் தேவையான அனைத்து உயர்தர மற்றும் உரிய சிகிச்சைகளையும் விரைந்து அளிக்குமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த மாலதி, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகமான செய்தியைத் தொடர்ந்து, அவருடைய உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான ராஜபாளையம் அருகிலுள்ள திருக்கோதையார்புரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மனைவியை இழந்து வாடும் நடிகர் முத்துக்காளைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
